விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!!
சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) , சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
1 நபருக்கு அதிகபட்சமாக 2 பவர் பேங்க் மட்டுமே விமானங்களில் அனுமதிக்கப்படும். இரண்டிற்கும் அதிகமான பவர் பேங்க்களை வைத்திருக்கும் பயணிகளைப் பயணம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் CAAS கூறியுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடானது ஏப்ரல் 15ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருக்கிறது.
மேலும் விமானப் பயணத்தின் போது பவர் பேங்க்களை சார்ஜ் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி மின்னோட்டம் செய்வதையும் தவிர்க்குமாறு பயணிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த புதிய கட்டுப்பாடானது சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) வெளியிட்டுள்ள சமீபத்திய பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் ஒத்துப் போவதாக CAAS கூறியுள்ளது.
பவர் பேங்க்களில் உள்ள லித்தியம் பேட்டரிகள் சில நேரங்களில் வெப்பமடைவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் கூடுதல் பாதுகாப்பு என்பது அவசியமாகிறது.
இந்த கட்டுப்பாடுகளுடன் தற்போது உள்ள விதிமுறைகளும் நடைமுறையில் இருக்கும்.
புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும், விமான நிலையங்களில் இது குறித்த விளம்பரங்களை செய்வதற்கு முயற்சி எடுத்துள்ளதாகவும் CAASதெரிவித்துள்ளது.
மேலும் விதிமுறைகள் குறித்து, பயணிகளுக்கு தெரிவிப்பதற்கும், அவர்களுக்கு பழக்கப்படுத்துவதற்கும் விமான நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விமானங்களில் மின்னோட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதால் தீப்பற்றி கொள்வதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த புதிய கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளதாக CAAS கூறியுள்ளது.