சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!!
சிங்கப்பூரின் ஜாலான் பெசார் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில், அபாயகரமாக வாகன ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.
ஜூலை 12 ஆம் தேதி அன்று இரவு 9:40 மணியளவில் கிச்சனர் ரோடு (Kitchener Road) மற்றும் ஜாலான் பெசார் சந்திப்பில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
SGRV Admin என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளி ஆனது பகிரப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில் கார் ஓட்டுநர் போக்குவரத்து சமிஞ்கையின் சிவப்பு விளக்கை (Ran a red light) மீறி சந்திப்பிற்குள் நுழைவது தெரிகிறது. அப்போது வலதுபுறத்திலிருந்து நேராகச் சென்ற மோட்டார் சைக்கிள், காரின் மீது பலத்த வேகத்துடன் மோதி உள்ளது.
இந்த மோதலின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காற்றில் தூக்கி வீசப்பட்ட சாலையில் விழுந்துள்ளார் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF), காயம் அடைந்த 28 வயது உள்ளூர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சுயநினைவுடன் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிங்கப்பூரில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதால், சிவப்பு விளக்குகளை மதிக்காமல் ஆபத்தாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான சிறை தண்டனையும், ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.