சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..??

சிங்கப்பூர்: ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில், லாரியின் மீது சாரம் (Scaffolding) சரிந்து விழுந்ததில் 23 வயது இளம் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவம், 30 ஜூரோங் போர்ட் ரோடு (Jurong port Road) கட்டுமானத் தளத்தில் ஆகஸ்ட் 3, காலை 9:50 மணி அளவில் நடந்துள்ளதாக காவல்துறைக்கும் SCDF – க்கும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த விபத்தில் அங்கிருந்த இரும்புச் சாரம் சரிந்து, அருகே நின்றுக்கொண்டிருந்த லாரியின் மீது திடீரென விழுந்து நசுங்கியது. அதில் 23 வயதுடைய லாரி ஓட்டுநர் உள்ளே மாட்டிக்கொண்டார்.

SCDF-ன் வீரர்கள், மீட்புக் குழு மற்றும் அங்குள்ள ஊழியர்கள் இணைந்து ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி அவரை மீட்டனர்.

அவரை பரிசோதித்த மருத்துவப் பணியாளர்கள், அந்த நபர் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்தனர்.

இந்த விபத்து குறித்த கொடூரமான காட்சிகள் அடங்கிய காணொளி ஆனது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காணொளியில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த இரும்பு சாரத்தின் அதீத எடையால், லாரியின் முன் பகுதி முற்றிலும் நசுங்கி காணப்படுவது தெரிகிறது.

மனிதவள அமைச்சு (MOM) விபத்து நடந்த தளத்தின் குத்தகைதாரரான ‘HPC Builders’ நிறுவனத்தை அங்குள்ள அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக அங்குள்ள கிரேன் (Crane) தூக்கும் கருவிகளைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனரகக் கட்டமைப்புகளைக் கையாளும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகள் (Safety Protocols)பின்பற்றப்பட்டதா என்பது குறித்து MOM தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவத்தில் ஏதேனும் குற்றவியல் அலட்சியம் உள்ளதா என்ற கோணத்தில் சிங்கப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.