சிங்கப்பூரில் BCRS திட்டம்: சிறு கடைகளுக்கு கூடுதல் அவகாசம்..!!அக்டோபர் 31 வரை நீட்டிப்பு..!

சிங்கப்பூரில் BCRS திட்டம்: சிறு கடைகளுக்கு கூடுதல் அவகாசம்..!!அக்டோபர் 31 வரை நீட்டிப்பு..!

சிங்கப்பூரில் Beverage Container Return Scheme (BCRS) எனப்படும் பானக் கொள்கலன் திரும்பப்பெறும் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், BCRS குறியீடு ஒட்டப்படாத பழைய பானப் பொருட்களின் கையிருப்பை இன்னும் விற்றுத் தீர்க்க முடியாத சிறிய சில்லறை விற்பனையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

சில சிறிய கடைகள், BCRS குறியீடு இல்லாத பழைய பானப் பொருட்களின் கையிருப்பை விற்றுத் தீர்க்க கூடுதல் நேரம் தேவைப்படலாம் என்பதை அரசு கருத்தில் கொண்டுள்ளது.

இதனால், இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் சிறிய சில்லறை விற்பனையாளர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேசிய சுற்றுச்சூழல் முகமையான NEA-விடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் ஒவ்வொன்றும் பரிசீலிக்கப்பட்டு, அதன் முடிவு எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அந்த சிறிய விற்பனையாளர்கள் BCRS திட்டத்தின் அமலாக்கத்திற்கான கூடுதல் கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்திற்கு, அதாவது அக்டோபர் 31ஆம் தேதி வரை பெற முடியும்.

இந்த கூடுதல் அவகாசம், BCRS குறியீடு இல்லாத பழைய கையிருப்புகளை விற்றுத் தீர்க்க உதவும் வகையில் வழங்கப்படுகிறது.

லாப நோக்கமற்ற அமைப்புகளும் குறிப்பிட்ட சூழ்நிலையில் கூடுதல் கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அவர்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், BCRS குறியீடு இல்லாத நன்கொடையாகப் பெறப்பட்ட பானப் பொருட்களை தங்களின் பயனாளிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை தொடர்ந்து விநியோகிக்க அனுமதி வழங்கப்படும்.

BCRS திட்டத்தின் கீழ், தகுதியான பானக் கொள்கலன்களுக்கு வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு, காலியான பாட்டில்கள் மற்றும் கேன்களை குறிப்பிட்ட திரும்பப்பெறும் இயந்திரங்களில் ஒப்படைப்பதன் மூலம் அந்த தொகையை மீண்டும் பெற முடியும்.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாட்டில்கள் மற்றும் கேன்கள் BCRS திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்பதை அதன் அதிகாரப்பூர்வ குறியீட்டை பார்த்து உறுதி செய்வது முக்கியம்.

சிங்கப்பூரில் பானக் கொள்கலன்களை மறுசுழற்சி செய்வதை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டம், அக்டோபர் 1 முதல் முழுமையாக அமலுக்கு வர உள்ளது.