புறாக்களுக்கு தொடர்ந்து உணவளித்த 68 வயது பெண்.. S$3,500 அபராதம் விதித்த நீதிமன்றம்!

சிங்கப்பூரில் பலமுறை எச்சரிக்கப்பட்டும் தொடர்ந்து புறாக்களுக்கு உணவளித்து வந்த 68 வயது பெண்ணுக்கு நீதிமன்றம் S$3,500 அபராதம் விதித்துள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஏழு நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
யீஷூன் பகுதியில் வசிக்கும் சென் சிங் சூ (Chen Qingzhu) என்ற அந்தப் பெண், புறாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் வனவிலங்குகள் தொடர்பான சட்டத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அவர் மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவற்றில் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எஞ்சிய குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்தப் பெண் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முறையாகப் புறாக்களுக்கு உணவளித்ததற்காக அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அதன்பிறகும் அவர் தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் 2018ஆம் ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அவருக்கு முறையே S$200 மற்றும் S$400 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் இரண்டு முறை விதிமீறலில் ஈடுபட்டதால் அவருக்கு மேலும் S$400 அபராதம் விதிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் அதிகாரிகள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவரது நடவடிக்கையால் அப்பகுதியில் வசிக்கும் அண்டை வீட்டாருக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
புறாக்கள் அடிக்கடி வீட்டிற்குள் வருவதுடன், அவற்றின் கழிவுகளால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாக அண்டை வீட்டார் புகார் அளித்துள்ளனர். மேலும், நகர மன்றத்தின் துப்புரவுப் பணியாளர் ஒருவரும் அந்தப் பெண் தொடர்ந்து புறாக்களுக்கு உணவளிப்பதைக் கவனித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி யீஷூன் 22வது தெருவில் உள்ள புளோக் 755 அருகே தரையில் அரிசியைத் தூவி புறாக்களுக்கு உணவளித்தபோது அதிகாரியால் அவர் மீண்டும் கண்டறியப்பட்டார்.
இத்தகைய நடவடிக்கையை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்.
இருப்பினும், 2026ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆறு முறை மீண்டும் அரிசி மற்றும் ரொட்டியைப் பயன்படுத்திப் புறாக்களுக்கு உணவளித்ததாகக் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் அவருக்கு S$3,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியதால் அதற்குப் பதிலாக ஏழு நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பலமுறை எச்சரிக்கப்பட்டும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால் 68 வயது பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதம் சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளிப்பது தொடர்பான சட்ட விதிமுறைகள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
