தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு காரில் தப்பியோட்டம்..! கார் கவிழ்ந்ததால் சிக்கிய 33 வயது ஆடவர்!

தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு காரில் தப்பியோட்டம்..! கார் கவிழ்ந்ததால் சிக்கிய 33 வயது ஆடவர்!

சிங்கப்பூரின் ரிவர் வேலி ரோட்டில் (River Valley Road) நடந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு காரில் தப்பியோடிய 33 வயது ஆடவர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நவம்பர் 6ஆம் தேதி இரவு சுமார் 8:35 மணியளவில் இடம்பெற்றது. ஆபத்தான பொருளைப் பயன்படுத்தி 34 வயது ஆடவர் ஒருவரைத் தாக்கியதாக 33 வயது நபர் மீது சந்தேகிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த 34 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து காவல்துறையினர் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12:05 மணியளவில் டெசன்சோன் ரோட்டில் (Tessensohn Road) சந்தேக நபர் ஓட்டிச் சென்றதாக நம்பப்படும் கார் கண்டுபிடிக்கப்பட்டது. காரை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியபோதும், ஓட்டுநர் நிற்காமல் வேகமாகச் சென்றதால் காவல்துறையினர் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அப்போது ரேஸ் கோர்ஸ் ரோடு (Race Course Road) மற்றும் பிர்ச் ரோடு (Birch Road) சந்திப்பில் மற்றொரு காருடன் மோதியதில் சந்தேக நபரின் கார் கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் மற்றொரு காரை ஓட்டிச் சென்ற 36 வயது ஆடவரும், அதில் பயணம் செய்த 26 மற்றும் 42 வயதுடைய இரு பெண்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நவம்பர் 7ஆம் தேதி 33 வயது ஆடவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆபத்தான வழிமுறையைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தியதாகவும், மூச்சுப் பரிசோதனைக்கான மாதிரியை வழங்கத் தவறியதாகவும் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது அவர் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.