கையில் வெறும் 10 வெள்ளி மட்டுமே..! சிங்கப்பூரில் தவித்த வெளிநாட்டு ஊழியருக்கு கிடைத்த புதிய வேலை!

சிங்கப்பூரில் பல மாதங்களாகச் சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 230க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் புதிய முதலாளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் புதிய வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளதுடன், சிலருக்குத் தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைச் சம்பளமும் கிடைத்துள்ளது.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி, செங்காங் வெஸ்ட்டில் உள்ள மனிதவள அமைச்சின் (MOM) வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்தில் வேலைவாய்ப்பு இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்டுமானம் மற்றும் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்று, வேலை தேடும் ஊழியர்களை நேர்காணல் செய்தன.
இந்த நிகழ்ச்சியில் பங்களாதேஷைச் சேர்ந்த 21 வயதான ரப்பானி முகமது கோலாம் என்பவருக்கு கட்டுமான நிறுவனமொன்றில் வேலை கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்கு வந்த அவர், தனக்குச் சேர வேண்டிய இரண்டு மாதச் சம்பளம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
கையில் 10 வெள்ளிக்கும் குறைவான பணமே இருந்த நிலையில், அடுத்தகட்ட வாழ்க்கை என்னவாகும் என்ற கவலையில் இருந்த அவருக்கு இந்த வேலைவாய்ப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நண்பர்களிடம் கடன் வாங்கி அன்றாடச் செலவுகளைச் சமாளித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், Process Maintenance Solutions நிறுவனத்தில் பணியாற்றிய ஆலம் முகமது சபீர் என்பவருக்கு நவம்பர் தொடக்கத்தில் நிலுவையில் இருந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்திற்குப் பணம் அனுப்ப முடியும் என்ற நிம்மதி அவருக்குக் கிடைத்துள்ளது.
சம்பளம் வழங்கப்படாத புகார்கள் தொடர்பாக Process Maintenance Solutions மற்றும் Jurong Technical & Construction ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனங்களில் பணியாற்றிய பெரும்பாலான ஊழியர்கள் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள். Process Maintenance Solutions நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 120 ஊழியர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் நிலுவைச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், Jurong Technical & Construction நிறுவனத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள் தங்களுக்கு இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சம்பளப் புகார்களைத் தீர்ப்பதற்கும் மனிதவள அமைச்சு மற்றும் வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) இணைந்து உதவி வருகின்றன.
ஊழியர்களுக்கு உணவு, தற்காலிகத் தங்குமிடம் மற்றும் நிதியுதவி போன்ற அடிப்படை உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், கட்டுமானத் துறை மட்டுமின்றி, பிற துறைகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் புதிய வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஊழியர்கள் உள்ளனர்.
சம்பளம் கிடைக்காமல் பல வாரங்களாகப் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கைகள் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளையில், அனைவருக்கும் நிலுவைச் சம்பளம் கிடைப்பதையும், புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதையும் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
