WhatsApp, Telegram குழுக்களில் முதலீட்டு மோசடி..!! S$35.8 மில்லியனை இழந்த சிங்கப்பூர் மக்கள்!

WhatsApp, Telegram குழுக்களில் முதலீட்டு மோசடி..!! S$35.8 மில்லியனை இழந்த சிங்கப்பூர் மக்கள்!

சிங்கப்பூரில் போலி முதலீட்டு WhatsApp மற்றும் Telegram குழுக்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை, போலி முதலீட்டுக் குழுக்கள் தொடர்பாக குறைந்தது 360 புகார்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளன. இந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் S$35.8 மில்லியன் பணத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை நவம்பர் 26ஆம் தேதி தனது Facebook பக்கத்தில் விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள், போலியான முதலீட்டு உரையாடல் குழுக்களை உருவாக்கி, அதில் உறுப்பினர்களாகச் சேரும் நபர்களுக்கு முதலீடு தொடர்பான ஆலோசனைகளையும், சிறப்பான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும், அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, குழுவில் உள்ளவர்களை முதலீடு செய்யத் தூண்டுகின்றனர். இதனை நம்பி பணத்தை முதலீடு செய்யும் சிலர் பின்னர் தங்களது பணத்தை இழக்க நேரிடுகிறது.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் முதலீட்டுத் திட்டத்தின் உண்மைத்தன்மையை நேரடியாகச் சரிபார்க்க வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், முதலீட்டுச் சேவைகளை வழங்கும் நிறுவனம் அல்லது தனிநபர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறார்களா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

முதலீடு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது மோசடியில் சிக்கியிருக்கலாம் எனத் தோன்றினாலோ, 24 மணி நேரமும் செயல்படும் ScamShield உதவி எண்ணான 1799-ஐத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.

அதிக லாபம் தருவதாகக் கூறப்படும் முதலீட்டு வாய்ப்புகளை நம்பி அவசரமாகப் பணத்தைச் செலுத்த வேண்டாம் என்றும், முதலீடு செய்வதற்கு முன்பு முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.