சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய ஏலம்..!! ஒரே கட்டத்தில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய்!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய ஏலம்..!! ஒரே கட்டத்தில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய்!!

சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய $3 பில்லியன் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ஹெர்ம்ஸ் (Hermès) கைப்பைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் முதல் ஆன்லைன் ஏலம் நிறைவடைந்துள்ளது. இந்த ஏலத்தில் ஒரு முதலைத் தோல் ஹெர்ம்ஸ் கைப்பை சிங்கப்பூர் டாலர் 4 லட்சத்திற்கு விற்பனையாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2021ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘லிட்டில் ஹவுஸ்’ (Little House) என்றழைக்கப்படும் முதலைத் தோல் பிர்கின் (Birkin) கைப்பைதான் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான பொருளாகும். இதன் ஆரம்ப மதிப்பீடு சிங்கப்பூர் டாலர் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 34 முறை ஏலப் போட்டி நடைபெற்றதைத் தொடர்ந்து, இறுதியில் சிங்கப்பூர் டாலர் 4 லட்சத்திற்கு இந்தக் கைப்பை விற்பனையானது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.28 லட்சத்திற்கும் அதிகமாகும்.

இந்த முதல் கட்ட ஆன்லைன் ஏலத்தில் மொத்தம் 103 ஹெர்ம்ஸ் கைப்பைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. நவம்பர் 26ஆம் தேதி இரவு 8.59 மணியுடன் அனைத்து பொருட்களுக்குமான ஏலமும் நிறைவடைந்தது.

இதில் மொத்தம் சிங்கப்பூர் டாலர் 32,26,790 ஏலத் தொகையாகக் கிடைத்துள்ளது. குறிப்பாக, ஏலத்தில் இடம்பெற்ற 103 பொருட்களில் 81 பொருட்கள் அவற்றுக்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மதிப்பீட்டையும் தாண்டி விற்பனையாகியுள்ளன.

இந்த ஏலத்தில் ஹெர்ம்ஸ் நிறுவனத்தின் பிரபலமான கெல்லி டால் (Kelly Doll) வகை கைப்பைகளும் அதிக கவனம் பெற்றன.

ஒரு கெல்லி டால் கைப்பை சிங்கப்பூர் டாலர் 1,80,000-க்கு விற்பனையானது.

மற்றொரு வரையறுக்கப்பட்ட பதிப்பு பிக்டோ (Picto) கைப்பை சிங்கப்பூர் டாலர் 1,15,000-க்கு விற்பனையானது.

2009ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மற்றொரு வரையறுக்கப்பட்ட பதிப்பு கைப்பை சிங்கப்பூர் டாலர் 75,000-க்கு ஏலம் போனது

2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பபுள்கம் பிங்க் நிற முதலைத் தோல் கெல்லி 25 (Kelly 25) கைப்பை இந்த ஏலத்தில் அதிக போட்டியைச் சந்தித்தது.

இந்த ஒரு கைப்பைக்காக மட்டும் 76 முறை ஏலம் கேட்கப்பட்டது. இதன் மதிப்பீடு சிங்கப்பூர் டாலர் 60,000 ஆக இருந்த நிலையில், இறுதியில் சிங்கப்பூர் டாலர் 1,60,000-க்கு விற்பனையானது. அதாவது, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டைவிட சுமார் 2.7 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.

$3 பில்லியன் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ஆடம்பரப் பொருட்களின் ஏலத்தில், முதல் கட்டத்திலேயே இவ்வளவு அதிகமான போட்டியும் விற்பனையும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.