சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!!
சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட போது விமானத்தில் 2 பயணிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 1.5 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா (Air Asia) விமானம், அதிகாலையில் புறப்பட தயாரானது. 186 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 196 பேர் விமானத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது விமானத்தில் இருந்த மலேசிய நாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார் (வயது 35), பிரஷாந்த் (36) ஆகிய 2 பயணிகள் திடீரென போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் விமானத்தில் இருந்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான பணிப்பெண்கள், அந்த 2 பயணிகளையும் அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
அவர்கள் 2 பேரின் விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்த அவர்களது உடைமைகள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன. அதன்பிறகு ஏர் ஏசியா விமானம், சுமார் 1.5 மணி நேரம் காலதாமதமாக 184 பயணிகளுடன், கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது.
விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட நந்தகுமார், பிரஷாந்த் ஆகிய 2 பயணிகளையும் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தனர். போலீஸார் 2 பேரிடமும் விசாரணை செய்தனர்.
விசாரணையில் 2 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்று, அங்கேயே நிரந்தரமாக தங்கி, மலேசிய குடியுரிமை பெற்றுவிட்டனர். தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் உறவினர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.
மீண்டும் மலேசியா திரும்பும்போது போதையில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. 2 பேரும் தங்களுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அவர்களுக்கு போலீஸார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.