சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்படும் புதிய நிதியாண்டு பட்ஜெட்டை முன்னிட்டு, குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் இன்று முதல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆறு வாரங்கள் நடைபெறும் பொது ஆலோசனைக் கூட்டத்தில் சிங்கப்பூரர்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு விவாதங்களில் பங்கேற்கலாம்.சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், தரமான வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் குடிமக்களின் பொதுவான முன்னேற்றத்தை மேம்படுத்தல் போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெறும்.
கருத்துக்களை அதிகாரப்பூர்வ பட்ஜெட் இணையதளம், மக்கள் தொடர்பு குழுவின் 2026 பட்ஜெட் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மக்கள் சங்கத்தின் ShareYourViews பக்கம் மூலமாக சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 21 ஆம் தேதி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ஜெனியோ மாலில் பொதுமக்களின் கருத்துக்களை நேரடியாக சேகரிக்க நிகழ்வு ஒன்றும் நடத்தப்படும்.
மேலும், மக்கள் சங்கம் மற்றும் அதன் அடிமட்ட அமைப்புகள் ஆன்லைன் தளங்கள் மற்றும் நேரடி நிலையங்கள் வழியாக பொதுமக்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் திரட்டும்..