சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:"ஹார்ட் & சோல் SG60" கண்காட்சி திறப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், “ஹார்ட் & சோல் SG60″ என்ற முதன்மை கண்காட்சி இன்று (26.08.25) ஆர்ச்சர்ட் நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க, மக்கள் அதே ஆர்வத்துடனும் உறுதியுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“60 ஆண்டுகள் ஒரு நாட்டிற்கு நீண்ட காலம் அல்ல, ஆனால் சிங்கப்பூருக்கு, அது ஒரு முக்கிய மைல்கல். ஸ்தாபனக் கால சவால்கள், பொருளாதார நெருக்கடி, கோவிட்-19 தொற்றுநோய் என பல்வேறு சவால்களை கடந்து, இன்று நாம் ஒன்றிணைந்துள்ளோம். SG60 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல; ஆழ்ந்த சிந்தனைக்கான தருணம் கூட” என்று அவர் தெரிவித்தார்.
வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் கண்காட்சி:
“நியூ ஹார்ட்ஸ் கனெக்டட்” எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கண்காட்சி, ஜப்பானிய ஆட்சி காலம், சுதந்திரப் போராட்டம், தேச கட்டியெழுப்பிய ஆரம்ப சவால்கள், உலகளாவிய நிதி நெருக்கடி, கோவிட்-19 போன்ற முக்கிய தருணங்களை படங்கள், வரலாற்றுப் பொருட்கள், ஊடாடும் அனுபவங்கள் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கிறது.
பிரதமர் வோங், இவை சிங்கப்பூரர்களின் துணிச்சலும் உறுதியும் பிரதிபலிப்பவை எனக் கூறினார். அதேசமயம், கண்காட்சி எதிர்கால கனவுகளையும் கவனத்தில் எடுத்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை எழுதுவதற்கான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவை கண்காட்சியின் இறுதியில் ஒரு கலை நிறுவலாக காட்சியிடப்படும்.
இது ‘டீம் சிங்கப்பூர்’ போன்ற அதே ஆர்வத்துடனும் உறுதியுடனும் நமது நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நம்மை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். SG60 க்கு அப்பால், உலகம் பார்க்கும் ‘சிறிய சிவப்பு புள்ளியாக’ சிங்கப்பூர் தொடர்ந்து பிரகாசிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.” என்று பிரதமர் வோங் கூறினார்.