காவல்துறை சோதனையை மீறி தப்பிய ஓட்டுநர்..!! அதிரடியாக விரட்டி பிடித்த போலீசார்..!
சிங்கப்பூர் : ஜூன் 28ஆம் தேதி அன்று பழைய சோ சூ காங் சாலையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி உள்ளது.
போக்குவரத்து போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியும், அதை பொருட்படுத்தாமல் தப்பித்து செல்ல முயன்ற 23 வயது இளைஞனை காவல்துறை கைது செய்துள்ளது.
தப்பித்து செல்ல முயன்ற அந்த நபரை போலீசார் உடனடியாக துரத்த தொடங்கினர். அதனால் பதட்டமடைந்த அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானார்.
அதன் பிறகு, தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு, அவர் தப்பித்து செல்ல ஓட முயன்ற போது, அவரை காவல்துறையினர் விடாமல் துரத்தி சென்றனர்.
இச்சம்பவம் குறித்த காணொளியானது SGRV என்ற facebook பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த காணொளியில் இரவு சுமார் 8:30 மணி அளவில் சிவப்பு மற்றும் நீல நிற விலிக்குகளுடன் பல காவல்துறை மோட்டார் சைக்கிள்கள், 1 மோட்டார் சைக்கிள் துரத்துவது தெரிகிறது.
அந்த துரத்தலில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதும் ஓட்டுநர் தரையில் விழுவது நன்றாக தெரிகிறது. உடனே எழுந்து ஓட முயன்ற அந்த ஓட்டுநரை போலீசார் பல மணி நேரம் துரத்தி சென்றுள்ளனர்.
இறுதியில் அந்த நபர் போக்குவரத்து காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு, சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் மோசடியாக சொத்துக்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அதிகாரிகள் அறிவுறுத்தியும் வாகனத்தை நிறுத்த தவறியது மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சோதனையில் 22 வயதான பெண் பயணி ஒருவர் மோசடியாக சொத்துக்களை வைத்திருந்ததன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.