சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை!

சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை!

உலகளாவிய மனித வள ஆலோசனை நிறுவனமான ரேண்டஸ்டாட் (Randstad) நடத்திய ‘2026 சிறந்த வேலை வழங்குநர்’ ஆய்வியல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டுக்கான (2025) தரவரிசையில் சாம்பியனாக திகழ்ந்த சாங்கி விமான நிலையக் குழுமத்தை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு (2026) சிங்கப்பூரின் மிக கவர்ச்சிகரமான வேலை அளிப்பவராக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மகுடம் சூடியுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் சுமார் 2,500 பேரிடம் நடத்தப்பட்ட விரிவான கருத்துக்கணிப்பின்படி, SIA நிறுவனம் சிறந்த வேலை அளிப்பவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் அது கொண்டுள்ள நம்பகத்தன்மை, தனது விமானங்களின் வசதிகளை மேம்படுத்த அண்மையில் அறிவித்த $1.1 பில்லியன் முதலீடு மற்றும் ஸ்டார்லிங்க் (starlink) வைஃபை வசதி மற்றும் ஊழியர்களை அரவணைத்து செல்லும் தரமான மேலாண்மை ஆகியவை முதலிடம் பிடிப்பதற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

ரேண்ட்ஸ்டாட் தரவரிசையில் பட்டியலில் முன்னணியில் உள்ள முதல் நிறுவனங்கள் பின்வருமாறு:
1.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(Singapore Airlines)
2.சாங்கி விமான நிலையக் குழுமம்(Changi Airport Group)
3 DBS வங்கி(DBS Bank)
4. இலுமினா(Illumina)
5.யுனைடெட் டெஸ்ட் அண்ட் அசெம்பிளி சென்டர் (UTAC)

சிங்கப்பூரில் உள்ள வேலை தேடுபவர்கள் மற்றும் ஊழியர்கள் வெறும் சம்பளத்தை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வேலை-வாழ்க்கை சமநிலை, போட்டித் தன்மை வாய்ந்த சம்பளம் மற்றும் சலுகைகள், தொழில் முறை வளர்ச்சி, சம வாய்ப்புகள் போன்றவற்றையும் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு முன்பும் 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த உயரிய விருதை வென்று, ‘ரேண்ட்ஸ் டாட் ஹால் ஆஃப் ஃபேம்'(Hall of Fame) கௌரவத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.