சிங்கப்பூர் HDB வீட்டில் பயங்கர தீ விபத்து..! 20 பேர் வெளியேற்றம்..2 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர் HDB வீட்டில் பயங்கர தீ விபத்து..! 20 பேர் வெளியேற்றம்..2 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர் பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள HDB குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் புகையைச் சுவாசித்த இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 20 பேர் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 72-ல் உள்ள 722ஆம் எண் HDB குடியிருப்பின் 8-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் தீ ஏற்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு இன்று காலை சுமார் 7:30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு நீர் பீச்சைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே, தீ ஏற்பட்ட வீட்டில் இருந்த 3 பேர் தாங்களாகவே வெளியேறியுள்ளனர்.

பாதுகாப்பு கருதி காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அந்த குடியிருப்பில் இருந்த சுமார் 20 பேரை வெளியேற்றினர்.

புகையைச் சுவாசித்த 2 பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், படுக்கையறையில் இருந்த மின்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒரே மின்சாரப் பெட்டியில் அதிகமான மின்சாதனங்களை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பயன்படுத்தாத மின்சாதனங்களின் மின்சாரத்தை அணைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும், மின்கம்பிகளில் சேதம் அல்லது வெளிப்புற உறை கிழிந்திருப்பது தெரிந்தால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும். மின்கம்பிகளை கம்பளம் அல்லது விரிப்புகளுக்கு அடியில் போடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சின்னம் கொண்ட மின்சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருத்திகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்கலன்கள் அல்லது மின்னணு சாதனங்களை யாரும் கண்காணிக்காமல் நீண்ட நேரம் சார்ஜ் செய்வதையும், இரவு முழுவதும் சார்ஜில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.