ஓட்டுநரே இல்லாமல் கார் ஓடும்..! சிங்கப்பூருக்கு வருகிறது Waymo..2028ல் புதிய சேவை..!!

ஓட்டுநரே இல்லாமல் கார் ஓடும்..! சிங்கப்பூருக்கு வருகிறது Waymo..2028ல் புதிய சேவை..!!

சிங்கப்பூரில் தானியங்கி வாகனங்களின் பயன்பாடு மேலும் விரிவடைய உள்ளது. Alphabet நிறுவனத்தின் தானியங்கி வாகன சேவை நிறுவனமான Waymo, சிங்கப்பூர் சந்தையில் நுழைய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் சிங்கப்பூரில் தானியங்கி வாகன சேவையை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கும். தற்போது ComfortDelGro மற்றும் Grab ஆகிய நிறுவனங்களும் தானியங்கி வாகன சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Waymo நிறுவனத்தின் தானியங்கி வாகனங்கள் அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 2027ஆம் ஆண்டு முதல் தயார்நிலை கட்டம் தொடங்கும். ஆரம்பத்தில், பயிற்சி பெற்ற தொழில்நுட்ப பணியாளர்கள் வாகனங்களை மனிதர்களின் கட்டுப்பாட்டில் இயக்குவார்கள்.

இதன் மூலம் Waymo-வின் தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பம் சிங்கப்பூரின் சாலை அமைப்பு மற்றும் உள்ளூர் போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.

Waymo-வின் தானியங்கி ஓட்டுநர் அமைப்பு சிங்கப்பூரின் தனித்துவமான சாலை சூழல்களை புரிந்துகொள்ளும் வகையில் பயிற்சி பெறும்.

குறிப்பாக சிங்கப்பூரின் சாலை வடிவமைப்பு, சாலை அமைப்பின் புவியியல் அம்சங்கள் மற்றும் பருவமழை காலநிலை போன்ற உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப தொழில்நுட்பம் தயார்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Waymo நிறுவனம் 2028ஆம் ஆண்டு சிங்கப்பூரில் செயலி மூலம் முன்பதிவு செய்யக்கூடிய முழுமையான தானியங்கி வாகனங்களின் வணிகச் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது, பயணிகள் செயலி மூலம் வாகனத்தை முன்பதிவு செய்து, ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் Waymo காரில் பயணம் செய்யும் வகையில் சேவை வழங்கப்படலாம்.

எனினும், இந்த வணிகச் சேவை தொடங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகளின் ஒழுங்குமுறை அனுமதி பெறப்பட வேண்டும்.

Waymo சிங்கப்பூரில் தனது சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் (LTA) இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி வாகனங்களின் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை உருவாக்குவதற்கும் LTA மற்றும் Waymo இணைந்து செயல்பட உள்ளன.

சிங்கப்பூரில் தானியங்கி வாகன தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், Waymo-வின் வருகை எதிர்காலத்தில் பயணிகள் பயன்படுத்தும் தனியார் வாடகை கார் சேவைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.