உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிரடி நடவடிக்கை..!! சிக்கிய 27 ஓட்டுநர்கள்… காரணம் என்ன?

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிரடி நடவடிக்கை..!! சிக்கிய 27 ஓட்டுநர்கள்... காரணம் என்ன?

சிங்கப்பூரில் செப்டம்பர் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் (ICA) தீவிர போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

செப்டம்பர் 4 முதல் 13ஆம் தேதி வரையிலான பள்ளி விடுமுறை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறிய 27 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைக்கு உள்ளான 27 ஓட்டுநர்களில் 24 பேர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் போது போக்குவரத்து விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் சிலர் இரட்டை வெள்ளைக் கோட்டைத் தாண்டுதல், சட்டவிரோதமாக வலதுபுறம் திரும்புதல், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அல்லது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை நிறுத்துதல் மற்றும் வரிசையில் இடைச்செருகுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டிருந்ததாக ICA தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களில் 16 வாகனங்கள் திரும்பிச் சென்று மீண்டும் முறையான வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டன.


மேலும், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டிச் சென்ற 8 ஓட்டுநர்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இவர்கள் இரட்டை வெள்ளைக் கோட்டைத் தாண்டுதல், வரிசையில் இடைச்செருகுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 16 ஓட்டுநர்களும் மேலதிக நடவடிக்கைக்காக போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிங்கப்பூருக்குள் நுழையும் போது விதிமீறலில் ஈடுபட்ட மேலும் 3 ஓட்டுநர்களும் நடவடிக்கைக்கு உள்ளாகினர்.

இவர்கள் வரிசையில் இடைச்செருகுதல் மற்றும் இரட்டை வெள்ளைக் கோட்டைத் தாண்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக ICA தெரிவித்துள்ளது. இவர்களும் மேலதிக விசாரணைக்காக போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவது மட்டுமின்றி, அமலாக்க அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் மற்ற வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களையும் ICA தீவிரமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது.

எந்தவொரு விதிமீறலாக இருந்தாலும் அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ICA எச்சரித்துள்ளது.

பள்ளி விடுமுறை காலங்களில் சோதனைச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகரிக்கக்கூடிய சூழலில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பது முக்கியமானதாக உள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, வரிசை ஒழுங்கையும் போக்குவரத்து பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.