சிங்கப்பூர் போலீஸ் வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! கல்லால் கண்ணாடிக் கதவை உடைத்த நபர் கைது..!

சிங்கப்பூர் போலீஸ் வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! கல்லால் கண்ணாடிக் கதவை உடைத்த நபர் கைது..!

சிங்கப்பூரில் உள்ள Police Cantonment Complex-ன் பிரதான நுழைவாயில் கண்ணாடிக் கதவை கல்லால் தாக்கி சேதப்படுத்தியதாக 44 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் செப்டம்பர் 15-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இரவு சுமார் 10.55 மணியளவில், சுமார் அரை கிலோ எடையுள்ள கல்லை எடுத்த அந்த நபர், போலீஸ் வளாகத்தின் பிரதான நுழைவாயில் கண்ணாடிக் கதவு மீது இரண்டு முறை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கண்ணாடிக் கதவு உடைந்து சேதமடைந்தது.

தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரை உடனடியாக கைது செய்தனர். கண்ணாடிக் கதவை உடைக்க பயன்படுத்தப்பட்ட கல்லும் சம்பவத்தின் ஆதாரமாக போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்றபோது அந்த நபர் மது போதையில் இருந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, 1966ஆம் ஆண்டு பொதுச் சொத்துச் சேதச் சட்டத்தின் பிரிவு 3 கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$2,000 வரை அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 3 முதல் 8 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

பொது சொத்துகளை சேதப்படுத்தும் இதுபோன்ற செயல்களைத் தாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.