தைவானில் பேருந்து மோதி சிங்கப்பூர் பெண் படுகாயம்..!! மீட்பின்போது நின்ற இதயத்துடிப்பு..!!

தைவானில் பேருந்து மோதி சிங்கப்பூர் பெண் படுகாயம்..!! மீட்பின்போது நின்ற இதயத்துடிப்பு..!!

தைவானில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 67 வயது சிங்கப்பூர் பெண் ஒருவர், பேருந்து மோதி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் செப்டம்பர் 16ஆம் தேதி காலை 11 மணியளவில், மத்திய தைச்சுங் நகரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையைக் கடந்து கொண்டிருந்தபோது, வலப்புறம் திரும்பிய பேருந்து ஒன்று அந்தப் பெண் மீது மோதியுள்ளது. இதில் அவர் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார். தகவல் கிடைத்ததும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர்.

மீட்பு நடவடிக்கையின்போது அவரது இதயத்துடிப்பு நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு உயிர்ப்பிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவரது இதய இயக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இந்த விபத்தில் அவரது வலது கை, இடது கால் மற்றும் இடுப்புப் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தனது மகள், மருமகன், பேத்தி உள்ளிட்ட 9 பேர் கொண்ட குடும்பத்துடன் தைவானுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். குடும்பத்தினர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் தொடர்புடைய பேருந்தை 45 வயது ஓட்டுநர் ஓட்டி வந்ததாகவும், அவர் போதைப்பொருள் அல்லது மதுபானம் உட்கொண்டிருக்கவில்லை என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரக அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.