S$2 மில்லியனுக்கும் மேல் பணம் எடுத்த கார் நிறுவன உரிமையாளர்..!! சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை!
சிங்கப்பூரில் William’s Auto கார் நிறுவனத்தின் இயக்குநர்களான இரு சகோதரர்கள் வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி குற்றங்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
72 வயதான Ang Ngoh Tee (William) என்பவருக்கு 5 மாதங்கள் 28 நாட்களும், 63 வயதான Ang Chai Heng (Winston) என்பவருக்கு 5 மாதங்கள் 3 நாட்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருவரும் தலா S$812,795 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.
நிறுவனம் GST-க்கு பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், சில சேவைகளுக்கான பண ரசீதுகளில் வாடிக்கையாளர்களிடம் GST வசூலிக்கப்படவில்லை.
2013 முதல் 2019ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட இந்தப் பணம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல், தனி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கணக்கிலிருந்து William S$2 மில்லியனுக்கும் அதிகமாகவும், Winston S$1 மில்லியனுக்கும் அதிகமாகவும் பெற்றுள்ளனர்.
மேலும், அறிவிக்கப்படாத பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி இருவரும் கார்கள் வாங்கியதாகவும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளில் நிறுவனத்தின் லாபம் குறைத்து காட்டப்பட்டதால், S$219,978 வரி குறைவாக செலுத்தப்பட்டது.
அதேபோல், 2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான சில காலகட்டங்களில் GST குறைத்து அறிவிக்கப்பட்டதால், S$50,952 GST குறைவாக செலுத்தப்பட்டது.
சிங்கப்பூர் சட்டப்படி, வரி ஏய்ப்பு குற்றத்திற்கு ஏய்க்கப்பட்ட வரியின் 4 மடங்கு வரை அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். பணமோசடி குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை, S$500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.