ஓடும் லம்போர்கினியில் திடீர் தீ..! ECP நெடுஞ்சாலையில் பரபரப்பு..!
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே நெடுஞ்சாலையில் பச்சை நிற லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஆனது நேற்று (ஜூலை 24) மாலை சுமார் 5:20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாங்கி நோக்கிச் செல்லும் ECP நெடுஞ்சாலையில், ஸ்டில் ரோடு சவுத் வெளியேற்றத்திற்கு சற்று முன்பாக இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
காரின் பின்புறம் இருந்த எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்த காணொளி ஆனது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் காணப்படும் காட்சிகளில் காரின் பின்புறம் பலத்த தீயுடன் கரும்புகை சூழ்ந்திருப்பது தெரிகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என SCDF வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF வீரர்கள் தண்ணீரை பீச்சியடிக்கும் வாட்டர் ஜெட் கருவியைப் பயன்படுத்தி தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரின் பின்புறம் தீயினால் முற்றிலும் கருகி உள்ளது.
இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலை இடதுபுற பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் மரின் பரேட் முதல் ரோச்சோர் ரோடு வரை பல காமணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) அறிவிப்புப்படி, அந்த வழியாக செல்லும் 4 பேருந்துச் சேவைகள் (12e, 36, 48, 518) சுமார் 25 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.