சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றுடம் கிரிப்டோ.காம் (Crypto.com)  நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் $1 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது என சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2026 மே முதல் இன்று வரை இது தொடர்பாக 30 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பயனர்களின் கணினியில் மைக்ரோசாப்ட் கணக்கு அல்லது சாதனம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு போலி பாப்-அப் (Pop-up) செய்தி தோன்றும்.

அதில் இருக்கும் 3 இல் தொடங்கும் எண்களை அழைக்கும் போது தொழில்நுட்ப உதவியாளர் போலவும், பின்னர் போலி காவல்துறை அதிகாரிகள் போலவும் மோசடிக்காரர்கள் பேசி மிரட்டுவார்கள்.


கணினியைச் சரி செய்வதாக கூறி, வங்கிக் கணக்கு அல்லது கிரிப்டோகரன்சி கணக்கு உள்ள பணத்தை மோசடி செய்பவர்களின் கணக்குகளுக்கு மாற்ற வைப்பார்கள்.

தங்களது அனுமதி இல்லாமல் வங்கி கணக்குகளில் பணம் பெருமளவில் எடுக்கப்பட்டு இருப்பது தெரிந்ததற்கு பின்னரே பயனர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிகிறார்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிழைச் செய்திகளில் தொலைபேசி எண்களைக் குறிப்பிடாது என்பதையும், சந்தேகத்திற்கிடமான பாப்-அப் விண்டோக்களை மூட F11அல்லது Esc பொத்தான்களைப் பயன்படுத்தலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்களது கிரிப்டோ கரன்சி கணக்கின் ரகசிய குறியீடுகளை ( Seed Phrases/Private Keys) யாருடனும் எப்பொழுதும் எதற்காகவும் பகிர வேண்டாம் என்பதையும் காவல்துறை பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.