போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!!
சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டி, ஒரு பயங்கர கார் விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்ற 34 வயது நபர் மீது நேற்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
34 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த புவா ஷே காங் மீது எட்டோமிடெட் போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டுதல், மரணத்தை விளைவிக்கும் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல் மற்றும் பிற கடுமையான குற்றங்களின் கீழ் குற்றசாட்டுபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 5ஆம் தேதி அதிகாலை 1:15 மணியளவில் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வேயை நோக்கிச் செல்லும் சாலையில் 2 கார்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட ஒரு பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. புவா ஜெ காங் ஒழுங்கற்ற முறையில் வாகனம் ஓட்டியதால் மற்ற வாகனங்கள் அவர் மீது மோதாமல் விலகி சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் தனது காரை விரைவுச் சாலையின் நடுவே நிறுத்தியதால் ஒரு மோட்டார் சைக்கிள் அவரது வாகனத்தின் மீது மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பயணியும் எதிரே வந்த வாகனங்கள் மீது விழுந்தனர். விபத்தில் காயமடைந்த 2 நபர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 20 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
28 வயதான பயணி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பொது சுயநினைவுடன் இருந்ததாகவும், ஆனால் அவரது முதுகுத் தண்டு மற்றும் வலது கணுக்காலில் எலும்பு முறிவுகள், தலையில் காயங்கள் மற்றும் சில சிராய்ப்புகள் உட்பட்ட கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட நபர் சம்பவ இடத்தில் அவர்களுக்கு உதவி செய்யாமல் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
விபத்து குறித்த புகார் கிடைத்ததை தொடர்ந்து தப்பித்து சென்ற அந்த நபரை 13 மணி நேரத்திற்குள் காவல்துறை கைது செய்தனர். அதன் பிறகு அவர் இரத்த பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டார். அதில் அவரது ரத்தத்தில் எட்டோமிடெட் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அவரது ஓட்டுநர் உரிமம் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்ச தண்டனையாக ல ஆண்டுகள் வரை சிறைதண்டனை $5,000 முதல் $20,000 வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் இடை நீக்கம் செய்யப்படுதல் போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம்.
மேலும் மரணத்தை விளைவிக்கும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர் என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 15 ஆண்டுகள் அவரது ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படலாம்.