செங்காங்கில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா..??
சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 12) மதியம் செங்காங்கில் உள்ள ரிவர்வேல் தெருவில் இருந்த ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான தீ ஏற்பட்டதால் அந்த குடியிருப்பில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது.
சியாவோஹாங்ஷுவில் சமூக ஊடக பயனர் ஒருவர் பதிவேற்றிய காணொளி ஒன்றில் இந்த விபத்து குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அந்த காணொளியில் எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் ஜன்னல்கள் தீ பிழம்புகளால் சூழப்பட்டிருந்தன. மேலும் அதிலிருந்து அடர்த்தியான கரும்புகை வானத்தை நோக்கி பரவி செல்வதையும் காணமுடிகிறது.
மேலும் அந்த காணொளியில் HDB குடியிருப்பு வளாகத்தின் கீழ் தளத்தில் பல தீயணைப்பு வண்டிகளும், சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினரும் (SCDF) தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுவதும் தெரிகிறது.
நேற்று (ஜூன் 12) மாலை 4:20 மணி அளவில் ஏதோ எரியும் வாசனை தான் உணர்ந்த வெளியே வந்து பார்த்தபோது, தெருவின் எதிர்புறத்தில் இருந்த HDB குடியிருப்பில் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்ததாகவும், தீயணைப்பு வண்டிகளின் சைரன் ஒலிகளைக் கேட்டதாகவும் அந்த சமூக ஊடகப் பயனர் தெரிவித்திருக்கிறார்.
இச்சம்பவம் குறித்த சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு மாலை 4:10 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து SCDF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது 3வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பின் படுக்கை அறையில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதையும், உள்ளே யாரும் இல்லை என்பதையும் கண்டறிந்தனர்.
SCDF வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட HDB குடியிருப்பில் இருந்த 120 பேரை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட கரும்புகையை சுவாசித்த காரணத்தால் 6 பேர் சிகிச்சைக்காக மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.