செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..!

செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..!

சிங்கப்பூர்: செராங்கூன் சாலை 562C-ல் உள்ள ஒரு கடைவீதி குடியிருப்பின் நான்காவது மாடியில் இன்று (ஜூலை 22 ) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அங்கிருந்த சுமார் 40 பேர் உடனடியாக குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று (ஜூலை 22) காலை சுமார் 9:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) இச்சம்பவம் குறித்த தகவல் ஆனது தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாட்டர் ஜெட்களைப் பயன்படுத்தியும், தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்க ஏரியல் வாட்டர் ஜெட் மூலம் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்புப் பணிகள் காரணமாக செராங்கூன் சாலையின் 5 பாதைகளில் 4 பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டு , மீண்டும் நெருப்பு பிடிக்காமல் இருக்க புகைமண்டலத்தைக் குளிர்விக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.