சிங்கப்பூரில் பொரித்த சாதத்தில் கரப்பான் பூச்சி.! பிரபல உணவகம் மீது SFA தீவிர விசாரணை!!
சிங்கப்பூர் காம்பங் அட்மிரல்டியில் உள்ள பிரபல உணவகத்தில் பொரித்த சாதத்தில் (Fried Rice) கரப்பான் பூச்சி கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஒரு நபர் காம்பங் அல்மிரல்டியில் உள்ள யாசின் காம்பங் உணவகத்தில் பொரித்த சாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.உணவின் முக்கால் பகுதியை சாப்பிட்டு முடித்த நிலையில், அதன் உள்ளே உடலின் கீழ்பகுதி இல்லாத ஒரு சிறிய கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்து காணொளியாக ஆவணப்படுத்தி, தனது டிக் டாக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் அந்த பதவில் சிங்கப்பூர் உணவு முகமை (SFA) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) ஆகியவற்றை அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உணவு முகமை இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என உணவு முகமை திட்டவட்டமாக கூறியுள்ளது.
உணவு வணிகங்கள் எப்போதும் தங்களின் சமையலறை மற்றும் வளாகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மீண்டும் நினைவூட்டி உள்ளது.
உணவு சேவை வழக்குநர்களின் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அவர்கள் இணைய வழி படிவத்தின் மூலம் அதிகாரிகளிடம் தங்களது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம் என SFA தெரிவித்துள்ளது.
மேலும் யாசின் ‘கம்பங் சீஃபுட்’ என்று எழுதப்பட்ட பலகை இருந்த ஓர் உணவகத்தின் உள்ளே எலிகள் அங்கும் இங்கும் ஓடுவது போன்ற காணொளியைக் ‘கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்’ என்ற முகநூல் குழுவில் இணையவாசி ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.