காரை ஓட்டியபடியே 10,533 பேருக்கு SMS..!! சிங்கப்பூரில் சிக்கிய மலேசியர்..!!

காரை ஓட்டியபடியே 10,533 பேருக்கு SMS..!! சிங்கப்பூரில் சிக்கிய மலேசியர்..!!

சிங்கப்பூரில் வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு SMS அனுப்பும் சாதனத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தொலைபேசிகளுக்கு ஃபிஷிங் தகவல்களை அனுப்பிய 28 வயதான மலேசியர் ஒருவருக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனையும் S$1,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த Ong Kak Seng என்ற அந்த நபர், 2025ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை சிங்கப்பூரின் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினமும் 10 முதல் 12 மணி நேரம் காரை ஓட்டியுள்ளார். அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறப்பு சாதனம் மூலம் அருகிலிருந்த கைபேசிகளுக்கு பெருமளவில் SMS தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

விசாரணையில், அந்த சாதனத்தின் Signal Range-க்குள் குறைந்தது 31,820 கைபேசிகள் வந்ததாகவும், அதில் 10,533 Phishing தகவல்கள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்தது.

அந்த தகவல்களில் போலியான இணையதள இணைப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றின் மூலம் பயனர்களின் WhatsApp உள்நுழைவு தகவல்களைப் பெறுவதும், பின்னர் whatsapp கணக்குகளை கைப்பற்றுவதும் மோசடியாளர்களின் நோக்கமாக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Ong Kak Seng, “White Brother” என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட ஒருவரை 2023ஆம் ஆண்டு சந்தித்ததாக கூறப்படுகிறது.

2025ஆம் ஆண்டு அக்டோபரில், சுமார் RM80,000 கடனில் இருந்த அவருக்கு தினமும் RM1,000 சம்பளம் வழங்கப்படும் வேலை ஒன்றை அந்த நபர் வழங்கியுள்ளார். இதற்காக சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்கில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்பு சாதனம் பொருத்தப்பட்ட காரை ஓட்ட வேண்டும் எனக் கூறப்பட்டது.

ஆரம்பத்தில், இந்த சாதனம் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை அனுப்புவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் நினைத்திருந்தாலும், அந்த வேலை சட்டவிரோதமானது என்பது அவருக்குத் தெரிந்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சில நாட்களில், அந்த சாதனம் Phishing தகவல்களை அனுப்புவதை அவர் அறிந்துகொண்டார். இருப்பினும், வேலையைத் தொடர்ந்து செய்துள்ளார்.

2025 அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சந்தேகத்திற்கிடமான WhatsApp மற்றும் SMS தகவல்கள் தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் கிடைத்தன.

நவம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது கார் மற்றும் வீட்டை சோதனையிட்டபோது, SMS அனுப்பும் சாதனம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த வேலை மூலம் சுமார் RM5,000 (சுமார் S$1,558) பெற்றிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இதுவரை குறைந்தது ஒருவர் மோசடியில் சிக்கி சுமார் S$1,800 இழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட Ong Kak Seng-க்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனையும் S$1,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

வழக்கறிஞர் தரப்பு, ஆயிரக்கணக்கான Phishing தகவல்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர் ஒருவர் மட்டுமே என்றும், உண்மையான பாதிப்புக்கும் ஏற்படக்கூடிய அபாயத்திற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் வாதிட்டது.

ஆனால், பெருமளவில் Phishing தகவல்களை அனுப்பியதுடன், தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு செயல்பட்டது போன்ற காரணங்களால் இந்த வழக்கின் சாத்தியமான பாதிப்பு அதிகம் என அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது.

இந்தச் சம்பவம், ஒரு SMS அல்லது WhatsApp தகவல் சாதாரணமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் மிகப்பெரிய மோசடி வலைப்பின்னல் இருக்கக்கூடும் என்பதை மீண்டும் எச்சரிக்கிறது. தெரியாத இணைப்புகளைத் திறக்காமல் இருப்பதும், தனிப்பட்ட உள்நுழைவு தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பதும் மிகவும் அவசியம்.