ரயிலில் திடீர் புகை…!! புக்கிட் கோம்பாக் MRT-யில் என்ன நடந்தது?

ரயிலில் திடீர் புகை...!! புக்கிட் கோம்பாக் MRT-யில் என்ன நடந்தது?

சிங்கப்பூரின் புக்கிட் கோம்பாக் MRT நிலையத்தில் இன்று (செப்டம்பர் 15) காலை ரயில் ஒன்றில் திடீரென அதிகளவில் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, நடைமேடையில் காத்திருக்கச் செய்யப்பட்டனர்.

இன்று(செப்டம்பர் 15) காலை சுமார் 11:37 மணியளவில் புக்கிட் கோம்பாக் MRT நிலையத்தில் சம்பந்தப்பட்ட ரயிலில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ரயிலில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியதைத் தொடர்ந்து, ரயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பு கருதி கீழே இறக்கப்பட்டனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறுகையில், அவர் Woodlands நிலையத்தில் இருந்து Jurong East நோக்கிச் சென்ற ரயிலில் பயணம் செய்ததாக தெரிவித்தார்.

ரயில் சில நிலையங்களை கடந்து சென்றபோது Yew Tee MRT பகுதியைச் சுற்றி துர்நாற்றம் கலந்த புகை வாசனையை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் ரயில் புக்கிட் கோம்பாக் நிலையத்தில் நின்றதும், MRT ஊழியர்கள் பயணிகளை வெளியேற்றியுள்ளனர்.

ரயிலில் தீப்பற்றியதை தான் பார்க்கவில்லை என்றாலும், அதிகளவில் புகை வெளியேறியதை பார்த்ததாக பயணி தெரிவித்துள்ளார்.


மேலும், மற்றொரு ரயில் பெட்டியின் மேற்பகுதியிலும் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனால் நடைமேடையில் ஏராளமான பயணிகள் திரண்டனர். சிலர் புகை காரணமாக மூக்கு மற்றும் வாயை கைகளால் மூடியபடி காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இருந்த MRT ஊழியர்கள் பயணிகளைக் கட்டுப்படுத்தி, நிலைமையைச் சமாளித்தனர்.

சம்பந்தப்பட்ட ரயில் சில நிமிடங்கள் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு சுமார் 5 நிமிடங்களில் அடுத்த ரயில் வந்ததால், பயண நேரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த பயணி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக SMRT நிறுவனத்திடம் மேலதிக தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக 8world தெரிவித்துள்ளது. ரயிலில் புகை ஏற்பட்டதற்கான சரியான காரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.

புக்கிட் கோம்பாக் MRT நிலையத்தில் திடீரென ரயிலில் புகை வெளியேறிய சம்பவம் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.