தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!
தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
இந்த நிலையில் பத்திரப் பதிவுக்கு கணிசமான தொகையில் லஞ்சமாக பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த தகவலை எடுத்து லஞ்சஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள 62 முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
அதில் கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் 64 பேர் மீது வழக்கும் பதிவாகியுள்ளது.
5 சார்பதிவாளர்கள், 8 உதவியாளர்கள், லஞ்சம் கொடுக்க வந்த தலைவர்கள் தனி மனிதர்கள் என பலர் இந்த சோதனையில் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சார்பதிவாளர்களில் பலரும் தங்களுடைய உதவியாளர்களைப் பயன்படுத்தி லஞ்சம் பெறுவதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அருண், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டதையெடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.