சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!!
சிங்கப்பூரின் வட்ட ரயில்பாதை ( Circle Line) கட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமை அடைந்து, வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் அதன் முழுமையான பொது பயண சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் நிறைவு விழாவும் புதிய நிலையங்களின் பொதுமக்கள் முன்னோட்ட பார்வையும் இன்று (ஜூலை 4) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த திட்டத்தின் இறுதி பகுதியாக 3 புதிய நிலத்தடி ரயில் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றன. அவை பின்வருமாறு: 1.கெப்பல் (Keppal) 2.கென்டான்மன்ட் (Cantonment) 3.பிரின்ஸ் எட்வர்ட் ரோடு (Prince Edward Road)
இந்த புதிய நிலையங்களின் திறப்பு மூலம் ஹார்பர்ஃபிரண்ட் மற்றும் மெரினா பே நிலையங்களுக்கு இடையிலான விடுபட்ட பகுதி இணைக்கப்பட்டு ரயில்பாதை ஒரு முழு வட்ட வடிவம் அடைகிறது.
இந்த நேரடி இணைப்பின் மூலம் குடியிருப்பாளர்களுக்கு பயண நேரம் சுமார் 10 நிமிடங்கள் வரை குறையும் .உதாரணத்திற்கு ஒரு நிலையத்திலிருந்து அடுத்த நிலையத்திற்கு செல்ல வெறும் 2 நிமிடங்களே ஆகும்.
சிங்கப்பூர் ரயில் கட்டணங்கள் ஆகக் குறைந்த தூரத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுவதால், இந்த நேர்வழிப் பயணம் மூலம் பயணிகளுக்கான ரயில் கட்டணமும் சில வழித்தடங்களில் குறைய வாய்ப்புள்ளது.
தற்போது முழுமை அடைந்துள்ள இந்த வட்ட ரயில்பாதை மொத்தம் 39 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டது. இதில் 33 ரயில் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய ரயில் பாதைகளுடன் இணையும் 12 சந்திப்பு மையங்கள் உள்ளன.
வட்டப்பாதை முழுமை அடைந்துள்ளதால், ரயில்கள் கடிகார திசை மற்றும் எதிர் கடிகார திசை எ இரு திசைகளிலும் இயங்கும்.
இதை எளிதாக்க முக்கிய ரயில் நிலையங்களின் டிஜிட்டல் திரைகளில் ரயிலின் இறுதி நிலையமும், அடுத்து வரும் பரிமாற்ற நிலையங்களில் விவரங்களும் மிக தெளிவாக காட்டப்படும் என LTA தெரிவித்துள்ளது.