சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு!
சிங்கப்பூர்: வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines)நிறுவனத்தின் 3 மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது பயணப் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் பயணப்பெட்டிகள் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்த போது அதற்கான அதிகாரப்பூர்வக் கட்டணத்தை செலுத்தாமல் தவிர்க்க இந்த லஞ்ச பரிமாற்றம் நடந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஜூன் வரையிலான காலகட்டத்தில் வியட்நாம் ஏர்லைன்ஸ்-ன் முன்னாள் நிலைய மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வெள்ளியில் லஞ்சமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஊழல் வழக்கில் 5 முக்கிய நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பதிவு சுமத்தப்பட்டுள்ளது. 1.அமீர்கான் ஜூல் ஹமீத் (வயது 42): முன்னாள் நிலைய மேலாளரான இவர் மீது சுமார் $41,700 லஞ்சம் பெற்றதாக 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
2.லே ட்ராக் துவான் (வயது 48):முன்னாள் நிலைய மேலாளரான இவர் மீது $6,500 லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . மேலும் இந்த முறைகேட்டை பற்றி மேலிடத்திலிற்கு தெரிவிக்காமல் இருக்க பொது மேலாளருக்கு $3,000 லஞ்சம் கொடுக்க முயன்றதற்காகவும் இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3.லாம் அன் வியட் (வயது 52): வியட்நாம் ஏர்லைன்ஸின் பொதுமேளாளரான இவர், மேற்கூறிய லஞ்சப் பணத்தை ஏற்க ஒப்புக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
4.பூவா பூன் லியோங் (வயது 51) & துவாங் தி நுங் (வயது 49) : கூடுதல் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக இந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க சதி திட்டம் தீட்டியதாக இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, $1,00,000 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.