1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் பறவைகளைக் காட்டுவதற்காக 1 வயது குழந்தையை HDB அடுக்குமாடிக் குடியிருப்பின் குறுகிய தாழ்வார சுவரில் ஆபத்தான முறையில் அமர வைத்த இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 2 மாதங்கள் மற்றும் 2 வார சிறை தண்டனையை விதித்துள்ளது.

இந்த விபரீத சம்பவமானது மே 18ஆம் தேதி அன்று அட்மிரல்டி டிரைவ் பகுதியில் உள்ள பிளாக் 468C HDB அடுக்குமாடிக்குடியிருப்பில் நிகழ்ந்துள்ளது.

29 வயதான இந்தோனேசியப் பணிப்பெண் இந்தா கோமலா சாரி என்பவர் தான் கவனித்துக் கொண்ட 1 வயது குழந்தைக்கு பறவைகளைக் காட்டுவதற்காக குடியிருப்பின் தாழ்வார சுவரில் குழந்தையை ஆபத்தான முறையில் அமர வைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த காணொளி ஆனது சமூக ஊடக பக்கங்களில் பரவி இணையவாசிகளிடையே  பேச்சுப் பொருளாக மாறியது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா மூலம் குழந்தையின் தாய் தனது மொபைலில் நேரலையாக பார்த்த போது பணிப்பெண்ணின் இந்த ஆபத்தான செயல் அவருக்கு தெரியவந்துள்ளது.

குழந்தை எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி சுவரின் விளிம்பில் வைக்கப்பட்டிருப்பதை கண்டு பதறிய தாய், உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

பணிப்பெண் மீது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சட்டத்தின் கீழ் குழந்தையை ஆபத்தில் உள்ளக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றாலும் பணிப்பெண்ணின் இந்த அலட்சிய செயலாளானது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கலாம் என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது.

பணிப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையெடுத்து, அவருக்கு 2 மாதங்கள் மற்றும் 2 வார சிறை தண்டனையை நீதிமன்றம் நேற்று (ஜூலை 23) வழங்கியுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பில் பணிப்பெண்கள் அல்லது பராமரிப்பாளர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.