உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி?

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி?

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி சமீபத்தில் தொழிற்சாலை ஷட்டில் பேருந்துகளை வெளியே செல்லும் சரக்கு பகுதிக்கு திருப்பி விட்டுள்ளது.

இதனால் பயணிகள் ஒரு பிரத்தியேக அனுமதி மண்டபத்தைப் பயன்படுத்த முடிகிறது.

இது அனுமதி வழங்கும் நேரத்தை குறைத்திருக்கலாம் என்றாலும், பல தொழிற்சாலை ஊழியர்கள் தங்கள் ஷட்டில் பேருந்துகள் சோதனைச் சாவடி அடைவதற்கு முன்பு நீண்ட போக்குவரத்து நெரிசல்களைச் சந்திப்பதாகவும் அதன் விளைவாக அவர்கள் வீட்டிற்கு தாமதமாக திரும்புவதாகவும் தங்களது புகார்களை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) சில தரவுகளை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 17ஆம் தேதி முதல் வார நாட்களில் மாலை நேர நெரிசல் நேரங்களில் மலேசிய ஊழியர்களை ஏற்றி செல்லும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் சரக்கு பகுதியில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் சோதனை முனையத்திற்கு திருப்பி விடப்படுகின்றன.

இந்த புதிய முனையத்தில் 15 தானியங்கி சோதனை இயந்திரங்கள்(Automated Clearance Kisosks) நிறுவப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களின் சராசரி குடிவரவு சோதனை நேரம் 30 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறைந்துள்ளது.

இந்த புதிய மாற்றுப் பாதை ஏற்பாடு சோதனைச் சாவடிக்குள் சோதனையை விரைவுப்படுத்தினாலும், சமூக வலைத்தளங்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் இதில் இருக்கும் சில சிக்கல்கள் குறித்து பதிவிட்டுள்ளனர்.

சோதனைச் சாவடியில் குடிவரவு சோதனை வேகமாக முடிந்தாலும் ஊழியர்கள் அனைவரும் தங்களின் குறிப்பிட்ட தொழிற்சாலை பேருந்துக்காக வெளியே காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து ஊழியர்களும் சோதனையை முடித்துவிட்டு பேருந்தில் ஏறும் வரை பேருந்து எடுக்கப்படுவதில்லை.

சிங்கப்பூர் பகுதியில் சோதனைகள் விரைவாக முடிந்தாலும் மலேசியாவின் ஜோகூர் எல்லையைத் தாண்டும் போது, ஏற்படும் பொதுவான போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் ஊழியர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தாமதமாகலாம் என ICA கூறியுள்ளது.

இந்த மாற்றுப் பாதை மூலம் பொது பேருந்துகள் மற்றும் லூப்பிங் பேருந்துகள் செல்ல முக்கிய பேருந்து நிறுத்தங்களில் நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக வழக்கமாக 11 மணிக்கு குறையும் சோதனை சாவடி நெரிசல் தற்போது இரவு 9 மணிக்கே குறைந்து விடுவதாக ICA தெரிவித்துள்ளது.

ICA-வின் அறிவிப்பின்படி, சோதனைச் சாவடிக்குள்ளான அரசாங்கத்தின் சோதனை நேரம் குறைந்துள்ளது. ஆனால் பேருந்துகளின் வருகை தாமதம் மற்றும் எல்லையோர போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊழியர்கள் தங்களின் பயண நேரம் பாதிக்கப்படுவதாக உணர்கின்றனர்.