சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!!

சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!!

சிங்கப்பூரில் செல்லப்பூனைகளை வளர்ப்பது தொடர்பான புதிய விதிகளுக்கான மாற்றக் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை 1.11 லட்சத்துக்கும் அதிகமான செல்லப்பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் Cat Management Framework கீழ், செல்லப்பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவதற்காக பூனை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு மாற்றக் காலம் தற்போது நிறைவடைகிறது.

செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள்:
செப்டம்பர் 1 முதல் உரிமம் பெறாத செல்லப்பூனைகளை வளர்ப்பது குற்றமாகும். விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மாற்றக் காலத்தில் பூனை உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூரின் Animal & Veterinary Service (AVS) சார்பில் நாடு முழுவதும் இலவச மைக்ரோசிப் முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 13,000-க்கும் அதிகமான பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த வருமானம் கொண்ட 2,900-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 6,300-க்கும் அதிகமான பூனைகள் இலவச கருத்தடை மற்றும் மைக்ரோசிப் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன.

பூனைகள் வளர்ப்பதற்கும் வரம்பு:
செப்டம்பர் 1 முதல் புதிய உரிம விண்ணப்பங்களுக்கு பூனைகள் வளர்ப்பதற்கான வரம்புகளும் அமலுக்கு வருகின்றன.

👉HDB வீடுகளில் அதிகபட்சம் 2 பூனைகள்

👉தனியார் வீடுகளில் அதிகபட்சம் 3 பூனைகள் அல்லது நாய்கள்
என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான பூனைகளை வைத்திருப்பவர்கள், மாற்றக் காலத்தில் அந்தப் பூனைகளுக்கு உரிமம் பெற்றிருந்தால் தொடர்ந்து வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தப் பூனைகள் செப்டம்பர் 1, 2024-க்கு முன்பே அவர்களிடம் இருந்திருக்க வேண்டும்.

உரிமக் கட்டணம் எவ்வளவு?மாற்றக் காலத்தில் அனைத்து பூனை உரிமையாளர்களுக்கும் ஒருமுறை பெறக்கூடிய வாழ்நாள் உரிமம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த காலத்திற்குப் பிறகு கருத்தடை செய்யப்பட்ட பூனைக்கு ஓராண்டு உரிமம் S$15, கருத்தடை செய்யப்படாத பூனைக்கு S$90 கட்டணமாகும்.

எனவே, சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்கள் மைக்ரோசிப் மற்றும் உரிமப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகளை உடனடியாக சரிபார்த்துக் கொள்வது அவசியம்.