சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..!

சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..!

சிங்கப்பூரில் உரிமம் பெற்ற பணக்கடன் வழங்குநர்களிடம் (Licensed Moneylenders) பிணையில்லா கடன் (Unsecured Loan) பெறுபவர்களுக்கு புதிய கட்டாய ‘Cooling-off’ காலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய நடைமுறை 2026 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பிணையில்லா கடன் பெற்றவர்கள், அந்தக் கடன் முடிவை மறுபரிசீலனை செய்ய 3 வேலை நாட்கள் அவகாசம் வழங்கப்படும். வணிகக் கடன்களுக்கு இந்த விதி பொருந்தாது.

இந்த 3 வேலை நாட்களில் சனி, ஞாயிறு மற்றும் சிங்கப்பூர் பொது விடுமுறை நாட்கள் சேர்க்கப்படாது.

கடனை ரத்து செய்ய வாய்ப்பு:
இந்த ‘Cooling-off’ காலத்தில், தான் பெற்ற கடன் தேவையில்லை என்று கடன் பெறுபவர் முடிவு செய்தால், குறைந்த கட்டணத்தில் அந்தக் கடனை ரத்து செய்ய முடியும்.

தற்போதைய நடைமுறையில், கடன் ரத்து செய்யப்பட்டால் பணக்கடன் வழங்குநர்கள் முழு loan approval fee-ஐ வைத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே சேர்ந்துள்ள வட்டியையும் வசூலிக்க முடியும்.

ஆனால் புதிய கட்டாய ‘Cooling-off’ காலம் நடைமுறைக்கு வந்த பிறகு, அந்த காலத்திற்குள் கடன் ரத்து செய்யப்பட்டால், பணக்கடன் வழங்குநர்கள் முழு approval fee-ஐ வைத்திருக்க முடியாது.

கடன் வழங்கும்போது ஏற்பட்ட செயல்பாட்டு செலவுகள் மற்றும் கடன் பெறுபவரின் விவரங்களைச் சரிபார்க்க மேற்கொள்ளப்பட்ட due diligence செலவுகளை ஈடுசெய்யும் அளவிலான குறிப்பிட்ட தொகையை மட்டுமே வைத்திருக்க முடியும்.

$5,000 வரை கடன் பெற்றால் எவ்வளவு கட்டணம்?
பிணையில்லா கடனின் அசல் தொகை $5,000 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், பணக்கடன் வழங்குநர் அதிகபட்சமாக $50 வரை வைத்திருக்கலாம்.

ஆனால், இந்த $50 தொகை ஏற்கனவே வசூலிக்கப்பட்ட loan approval fee-ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

$5,000-க்கு மேல் கடன் பெற்றால்?
கடனின் அசல் தொகை $5,000-க்கு மேல் இருந்தால், பணக்கடன் வழங்குநர் அதிகபட்சமாக கடன் அசல் தொகையின் 3.5% வரை வைத்திருக்கலாம்.

இங்கும், அந்தத் தொகை ஏற்கனவே வசூலிக்கப்பட்ட loan approval fee-ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

கடன் ரத்து செய்தால் வட்டி இல்லை:
முக்கியமாக, ‘Cooling-off’ காலத்திற்குள் கடனை ரத்து செய்யும் கடன் பெறுபவர்கள் எந்தவித வட்டியும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும், கடன் ரத்து செய்யும்போது கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை, பெற்ற கடனின் அசல் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது.

திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையில், முன்கூட்டியே வசூலிக்கப்பட்ட loan approval fee-ஐ கழித்த பிறகு கடன் பெறுபவருக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள அசல் தொகையும், பணக்கடன் வழங்குநர் வைத்திருக்க அனுமதிக்கப்படும் approval fee-யின் ஒரு பகுதியும் அடங்கும்.

இந்த புதிய ‘Cooling-off’ நடைமுறை, அவசரமாக கடன் பெறும் முடிவை எடுத்தவர்கள் பின்னர் அதனை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கடன் வழங்குநர்கள் கடன் ஒப்புதல் மற்றும் தொடர்புடைய சரிபார்ப்பு பணிகளுக்காக மேற்கொண்ட செலவுகளுக்கு ஓரளவு இழப்பீடு பெறுவதையும் இந்த நடைமுறை உறுதி செய்கிறது.

சிங்கப்பூர் சட்ட அமைச்சகம், Singapore Credit Association-உடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த ‘Cooling-off’ கட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Registry of Moneylenders, இந்த புதிய நடைமுறை சுமூகமாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

புதிய 3 வேலை நாள் கட்டாய ‘Cooling-off’ காலம் 2026 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.