சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..??
சிங்கப்பூரில் திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களை தங்களது கைபேசிகளிடம் இணைத்து, பின்னர் மின்னணு அட்டை பணப்பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி, தங்க நகைகள் மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய மர்ம கும்பல் பற்றிய புகார் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புகார் கிடைத்த 48 மணி நேரத்தில் காவல்துறையினர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கையும் களவுமாக கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பேசிகள், கம்பியில்லா காதணிகள், தங்க நகைகள் மற்றும் பிற ஆதாரங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தைவான் நாட்டைச் சேர்ந்த 28 வயது ஆண் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயதுடைய 2 ஆண்கள் என காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது கடன் அட்டை ப் பயன்படுத்தி மொத்தம் $5,697 மதிப்புள்ள 2 அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஒரு நபர் ஜூன் 10ஆம் தேதி என்று புகார் அளித்திருந்தார்.
மத்திய காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரிவான விசாரணையை மேற்கொண்டு சிசிடிவி மற்றும் காவல்துறை கண்காணிப்பு பதிவுகள் உதவியுடன் 28 வயதான தைவான் நாட்டைச் சேர்ந்தவரை அடையாளம் கண்டறிந்தனர்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் திருடப்பட்ட கடன் அட்டைத் தகவல்களை தனது தொலைபேசியுடன் இணைத்து, அருகாமைத் தொடர்பு (NFC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில்லரை விற்பனை கடையில் 3 ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் தொலைபேசிகளை வாங்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும் அடுத்த கட்ட விசாரணையில் திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைப் பயன்படுத்தி மின்னணு பொருட்கள் மற்றும் தங்க நகைகளை வாங்குமாறு வெளிநாடுகளில் உள்ள நபர்களால் அந்த நபருக்கு அறிவுறுத்தல் வந்ததாகவும், பின்னர் அவற்றை 24 வயதுடைய 2 சிங்கப்பூர் நபர்களிடம் ஒப்படைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
காவல்துறை சந்தேகித்த 3 நபர்களையும் புகார் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தலில் அந்த மூவரும் ஒரே மோசடி திட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது இன்று (ஜூன் 13) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.