சிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்ட போலி காணொளி..!! $5 மில்லியனை இழந்த நபர்..!!
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் பேசுவது போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) உருவாக்கப்பட்ட Zoom காணொளிகளைக் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இது போன்ற மோசடிகளை நம்பி அதில் சிக்காமல் இருக்குமாறும் காவல்துறை வலியுறுத்தி இருக்கிறது.
Deep Fake செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட zoom சந்திப்புக் காணொளியையும் மோசடிக்காரர்களின் செயல்முறையையும் காவல்துறை நேற்று (மே 16) ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் அமைச்சரவைச் செயலாளர்களாக நடித்து பாதிக்கப்பட்டவர்களை பிரதம மந்திரிகள் மற்றும் பிற உள்நாட்டு சர்வதேச அரசு அதிகாரிகளுடனான காணொளிக் கூட்டங்களுக்கு வரவழைத்த பின்னர் அவர்களை ஏமாற்றி பணம் பரிமாற்றம் செய்ய வைக்கின்றனர்.
காவல்துறைக் கைப்பற்றிய காணொளியில் பிரதமர் லாரன்ஸ் வோங், அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, சிங்கப்பூர் நாயைஆணையத்தின் பிரதிநிதிகள் ஹோர்முஸ் நீரிணைப் பற்றி கலந்துரையாடுவது போல் இருந்தது.
அதில் கனடாவின் வெளியுறவு அமைச்சர், ஐக்கிய அரபுச் சிற்றரசர்கள் அதிபரின் மூத்த அரசதந்திர அலோசகர், தனியார் துறையைச் சேர்ந்த பிளாக்ராக், துபாய் அனைத்துலக நிதி நிலையத்தில் பிரமுகர்களும் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்றப்படும் நபர் தனியார் துறை பங்கேற்பாளர்களில் ஒருவராக கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவார். பின்னர் தன்னை வழக்கறிஞர் போல் காட்டிக்கொண்டு மோசடிக்காரர் தனியார் துறையைச் சேர்ந்தவர்களைத் தனித்தனியாக தொடர்புக் கொண்டு பணத்தை அனுப்பும்படி கேட்டுக் கொள்கின்றனர். அதை நம்பிய ஒருவர் கிட்டத்தட்ட $ 4.9 மில்லியனை அந்த மோசடிக்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.
மே 14 ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட ஆலோசனை குறிப்பில் இது போல மேலும் பல போலி காணொளிகள் மற்றும் மோசடி சம்பவங்கள் வெளிவரும் என்று எச்சரித்துள்ளது.
அரசு அதிகாரிகளுடன் முன்பே தொடர்பு கொண்டிருந்த தொழில் அதிபர்களை இத்தகைய மோசடிக்காரர்கள் குறிவைத்து ஏமாற்றுவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
மோசடி காணொளிகளை ஆராய்ந்ததில் அதில் Deep Fake தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிகின்றது. பேச்சாளர்களின் குரல் அவர்களுடைய உதட்டசைவுடன் ஒத்துப் போகவில்லை. பேச்சாளர்களின் காணொளி முன்பே பதிவு செய்யப்பட்டு பின்னர் போலியான குரல் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.