ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!!
ஜோகூர் பாரு: ஜோகூர் ம கடற்பாளத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் சிங்கப்பூரரான 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மே 27ஆம் தேதி அன்று கடல் பாலத்தின் மலேசியப் பகுதியான தாம்பாக் ஜோகூர் என்ற இடத்தில் அதிகாலை 3:20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
காவல்துறை இது குறித்த விசாரணை மேற்கொண்டதில் ஜோகூரின் புக்கிட் சாகர் பகுதியில் இருந்து குடிவரவு சோதனை சாவடியை நோக்கி அந்த நபர் சென்றுள்ளதாக தெரிகிறது. கார்கள் வந்து கொண்டிருந்தபோது பாதையில் அவர் தவறுதலாக நுழைந்து விட்டதாக காவல்துறை கூறியது.
சுதாகரித்துக் கொண்டு திரும்ப முயன்றபோது மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறம் விலகி சென்றுள்ளது. பின்னர் சாலை தடுப்பில் மோதி ஒரு கூர்மையான வளைவில் சறுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் தூக்கி எறியப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் லாரிகளுக்கான பாதையில் அவர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் அதிகமாக இருந்துள்ளன. அதே இடத்தில் அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.
இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் விசாரணைக்கு உதவ முன்வருமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. விவரம் தெரிந்தவர்கள் 017-3064769 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.