மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!
மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் பேஸ்புக் போன்ற பல சமூக ஊடகத் தளங்களை இயக்கி வருகிறது.
மெட்டா நிறுவனம் பொய்யான மற்றும் பதற்றத்தை உண்டாக்கும் உள்ளடக்கங்கள் கொண்ட பதிவுகளை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் இது தொடர்பான விரிவான நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகத் தடை, ராணுவ நடவடிக்கைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டண வசூல் திட்டங்கள் குறித்தும் பல பொய்யான விபரங்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த காரணங்களால் மெட்டா நிறுவனம் இது போன்ற செய்திகள் பரவுவதைத் தடை செய்ய வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை அளித்துள்ளது.