கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாக புகார்..!! S$19,800 இழப்பீடு வழங்க உத்தரவு..!
சிங்கப்பூரில் கர்ப்பமானதாலும், மகப்பேற்று விடுப்பு வழங்க வேண்டியிருந்ததாலும் தவறான முறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகப் புகார் அளித்த பெண்ணுக்கு S$19,800 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை வேலையிடச் சம்பளக் கோரிக்கை நடுவர் மன்றம் வழங்கியுள்ளது. பெண்ணுக்கு 3 மாதச் சம்பளத்துக்கு இணையான தொகையும், அவர் எதிர்கொண்ட பாதிப்புக்காக மேலும் 3 மாதச் சம்பளத்துக்கு இணையான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் 2021ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அவரது பணித்திறனுக்கு நல்ல மதிப்பீடு வழங்கப்பட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு அவரது பிரிவுக்கு புதிய இயக்குநர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
அதே ஆண்டில் அந்தப் பெண் கர்ப்பமானார். அதன் பின்னர் அவருக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும், அவர் அணியில் சரியாகப் பொருந்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மகப்பேற்று விடுப்பு முடிந்தவுடன் தாம் பணியிலிருந்து நீக்கப்படுவார் என்று புதிய மேலதிகாரி தம்மிடம் தெரிவித்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
மேலும், மகப்பேற்று விடுப்பைத் தொடர்ந்து சில மாதங்கள் பணியிடை விடுப்பு எடுப்பது குறித்தும் அவர் ஆலோசித்துள்ளார். ஆனால், தாம் மீண்டும் பணிக்குத் திரும்புவதை புதிய இயக்குநர் விரும்பவில்லை என்று வேறொரு ஊழியர் தம்மிடம் தெரிவித்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலைக்குப் பின்னர், 2023ஆம் ஆண்டு இறுதியில் அந்தப் பெண் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளார்.
மகப்பேற்று விடுப்பில் இருந்தபோது தம்மை வேலையிலிருந்து விலகும்படி கட்டாயப்படுத்தியதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு மொத்தம் S$19,800 இழப்பீடு வழங்கத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், கர்ப்பம் மற்றும் மகப்பேற்று விடுப்பு தொடர்பாக பணியிடங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவனத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.