சிங்கப்பூர் HDB வீட்டில் திடீர் தீ..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூரின் ஆங் மோ கியோ 4, பிளாக் 254-ல் உள்ள HDB குடியிருப்பின் 7ஆம் மாடி வீட்டில் நேற்று (செப்டம்பர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டது
காலை 10:45 மணியளவில் தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற SCDF அதிகாரிகள், வீட்டின் வரவேற்பறையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டனர்.
வரவேற்பறையில் இருந்த பொருட்களில் தீப்பற்றியிருந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஒரு நீர்த்தாரையைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
தீயை அணைக்கும் பணியின்போது வீட்டின் படுக்கையறையில் இருந்த 2 பேர் மீட்கப்பட்டனர். புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புக்காக அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கு வெப்பச் சோர்வு தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Woodlands Hospital-க்கு அனுப்பப்பட்டார். இதனால் மொத்தம் 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த HDB கட்டிடத்தில் வசித்த சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமையலைக் கண்காணிக்காமல் விடுதல், மின்சாதனங்களில் ஏற்படும் தீ மற்றும் கவனிக்காமல் மெழுகுவர்த்தி அல்லது சிகரெட் போன்றவற்றை எரியவிடுதல் ஆகியவை வீடுகளில் தீ ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் என SCDF தெரிவித்துள்ளது.