சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!!
சிங்கப்பூர் : சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பயங்கரமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
ROADS.sg என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளியானது பதிவேற்றப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு அவ்வழியில் செல்லும் பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்கு அவர்களது வாகனங்களை நிறுத்திய காட்சியை அந்த காணொளியில் காண முடிகிறது.
அந்த காணொளியில் கடும் காயங்கள் ஏற்பட்டு, ஒருவர் எழுந்து கூட நிற்க முடியாமல் போராடிய காட்சியும் தெரிகிறது.
இந்த விபத்தானது இந்த மாதம் (ஏப்ரல்) 1 ஆம் தேதி அன்று, 2:16 மணி அளவில் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள ஆர்ச்சர்ட் வெளியேறும் வழிக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்த தகவலானது, புதன்கிழமை (மார்ச் 1) மதியம் 2:15 மணியளவில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 64 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயம் அடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவருக்கு அதிக காயங்கள் ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
மேலும் 41 வயதான பெண் ஒருவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி இந்த விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 68 வயதான கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணைக்கு அந்த ஓட்டுநர் ஒத்துழைத்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விபத்து குறித்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.