மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!!
சிங்கப்பூர் : மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த இளைஞரைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஒரு வெள்ளை நிற செடான் கார் இரண்டு வழித்தடங்களுக்கு இடையில் தாறுமாறாக தள்ளாடி திடீரென அதிவேகமாக சென்று அங்குள்ள நடுச்சுவரில் மோதியுள்ளது. கிளார்க் குவே பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டு அந்தக் காரின் ஓட்டுநரான 28 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாகனத்தில் உள்ளே இருந்த ஒளிப்பதிவுக் கருவியில் பதிவான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. அதில் ரிவர் வேலி ரோட்டில் மெதுவாக போன வெள்ளை கார் சிகியூ@கிளார்க் கீ என்ற கடைப்பகுதியைக் கடந்துள்ளது.
காரில் விளக்குகள் எதையும் பயன்படுத்தாமல் ஒரு தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு மாறுவதும் அந்த காணொளியில் பார்க்க முடிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் கார் சாலை தடுப்பின் மீது ஏறும் அளவிற்கு சென்றதும் அந்த காணொளியில் தெரிகிறது.