சிங்கப்பூரில் மாணவியிடம் அத்துமீறிய முன்னாள் ஆசிரியர்..!! 16 ஆண்டுகள் சிறை தண்டனை..!

சிங்கப்பூரில் மாணவியிடம் அத்துமீறிய முன்னாள் ஆசிரியர்..!! 16 ஆண்டுகள் சிறை தண்டனை..!

சிங்கப்பூரில் சிறுமி ஒருவரை பலமுறை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த முன்னாள் உடற்கல்வி (PE) ஆசிரியருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

45 வயதான அந்த சிங்கப்பூர் நாட்டவர், சம்பவங்கள் நடந்த 2022 மற்றும் 2023 காலகட்டத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கு அப்போது 18 ஆண்டுகள் ஆசிரியர் அனுபவம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவி 14 முதல் 15 வயதுக்குள் இருந்தபோது அந்த ஆசிரியரின் PE வகுப்பில் படித்து வந்தார். மாணவியை Instagram மூலம் தொடர்புகொண்ட ஆசிரியர், பின்னர் காதல் உணர்வுகளைத் தெரிவித்ததாகவும், ஆசிரியர்–மாணவர் உறவு இருப்பதில் பிரச்சினையில்லை என்று கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாணவியை ஹோட்டலுக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார். சில மாதங்களுக்குள் இருவரும் ஆறு முறை ஹோட்டல் அறைகளில் சந்தித்துள்ளனர். அவற்றில் ஐந்து சந்திப்புகளில் பாலியல் செயல்கள் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பள்ளி முகாமின்போது ஒரு அறையிலும் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாகவும், பள்ளியின் PE அறையில் அவரை முத்தமிட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.


2023 ஜனவரியில் மாணவி அந்த உறவை முடித்துக்கொண்டார். இதையடுத்து ஆசிரியர் மாணவியின் பள்ளித் தோழியிடம் அவரைப் பற்றிய தகவல்களை கேட்டதுடன், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதாகவும் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாணவியுடன் ஆசிரியர் நெருக்கமாக இருந்தது குறித்து பள்ளிக்கு தகவல் கிடைத்தது. பள்ளி நிர்வாகம் அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஹோட்டல் அறைகளில் மாணவியை முத்தமிட்டதாக ஒப்புக்கொண்ட அவர், நடந்த பாலியல் குற்றங்களின் முழு விவரங்களைக் குறிப்பிடவில்லை. மேலும், மாணவியுடன் பரிமாறிய சில செய்திகளையும் அவர் அழித்திருந்தார்.

2023 பிப்ரவரியில் மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கில் ஆசிரியர் மீது விதிக்கப்பட்ட அடையாளப் பாதுகாப்பு உத்தரவால், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரும், ஆசிரியரின் பெயரும், அவர் பணியாற்றிய பள்ளியின் பெயரும் வெளியிடப்படவில்லை.

மாணவியின் மனநிலையில் இந்த சம்பவங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு தற்கொலை எண்ணங்கள், கனவுத் தொல்லை, உணவு விருப்பமின்மை மற்றும் சுய காயப்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

2023 பிப்ரவரி முதல் அந்த ஆசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் எந்தப் பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றவில்லை என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மூன்று பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் கடந்த ஜூலை மாதம் ஒப்புக்கொண்டார். மேலும் 12 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும் போது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட மாணவியின் ஆசிரியராக இருந்து, அவரும் அவரது பெற்றோரும் வைத்திருந்த நம்பிக்கையை அந்த நபர் தவறாக பயன்படுத்தியதாக நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிறுமியுடனான உறவு சுரண்டல் தன்மை கொண்டதாக நிரூபிக்கப்படும் பாலியல் ஊடுருவல் குற்றத்திற்கு சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.