37 லட்சம் மோசடி பக்கங்கள் முடக்கம்..! சிங்கப்பூர் காவல்துறை–மெட்டா கூட்டணியின் அதிரடி நடவடிக்கை!

சிங்கப்பூர் காவல்துறையும் மெட்டா நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், சமூக வலைத்தளங்களில் மோசடிகளுக்குப் பயன்படுத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த 37 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி பக்கங்கள் மற்றும் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூர் காவல்துறையும் மெட்டாவும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு இணைய மோசடி கும்பல்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையில் முக்கியமாக 36 லட்சத்துக்கும் அதிகமான ‘ஷெல்’ பக்கங்கள் ஜூலை 2026-ல் நீக்கப்பட்டுள்ளன.
இந்தப் பக்கங்கள் வெளிப்பார்வைக்கு வெறுமையாகவும் பாதிப்பில்லாததாகவும் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் மோசடி விளம்பரங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக முன்கூட்டியே உருவாக்கப்பட்டிருந்ததாக மெட்டா தெரிவித்துள்ளது.
மோசடிகள் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பக்கங்களை கண்டறிந்து முடக்கியதன் மூலம், குற்றவாளிகளின் இணையக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காவல்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2026 ஜனவரி முதல் ஜூன் வரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மோசடி மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 1.13 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் மற்றும் பக்கங்கள் மீது மெட்டா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் பெரும்பாலானவை அதிக லாபம் அல்லது உறுதியான வருமானம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஈர்க்கும் போலி முதலீட்டு மோசடிகள் தொடர்பானவை. காவல்துறை வழங்கிய ஒவ்வொரு தகவலுக்கும் ஐந்து மடங்குக்கும் அதிகமான தொடர்புடைய பக்கங்களை மெட்டா கண்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறைக் காலத்தை முன்னிட்டு ஜூன் மாதத்தில் இணைய வணிக மோசடிகளுக்கு எதிராகவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான தள்ளுபடிகள், அவசர விற்பனை அறிவிப்புகள், மிகைப்படுத்தப்பட்ட பொருள் விளம்பரங்கள் உள்ளிட்ட முறைகளில் மக்களை ஏமாற்ற முயன்ற 33,600க்கும் மேற்பட்ட கணக்குகள் மற்றும் பக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது.
தனித்தனியாகப் புகார் அளிக்கப்பட்ட பின்னர் கணக்குகளை முடக்குவதற்குப் பதிலாக, மோசடி கும்பல்களின் முழு இணையக் கட்டமைப்பையும் கண்டறிந்து செயலிழக்கச் செய்வதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மேலும், இந்த ஆண்டில் (2026) இதுவரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 6.5 கோடி மோசடி விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 94% விளம்பரங்கள் பயனர்கள் புகார் அளிப்பதற்கு முன்பே தானாகக் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
மோசடி கும்பல்களின் செயல்பாடுகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், காவல்துறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வு மூலம் மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
