S$500,000க்கும் மேல் மோசடி..!!சிங்கப்பூரில் செயல்பட்ட கும்பலின் முக்கிய நபர் கைது!

சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலின் முக்கிய நபராக சந்தேகிக்கப்படும் 27 வயது மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“டா சியாங்” என அழைக்கப்படும் அந்த நபர், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களைப் பெறுவதற்காக மலேசியர்களை ஆட்சேர்ப்பு செய்து ஒருங்கிணைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நபர்ர் செப்டம்பர் 22ஆம் தேதி மலேசியாவில் ராயல் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், அவர் குறைந்தது நான்கு மலேசியர்களை நேரடியாகச் சந்தித்து, மோசடி நடவடிக்கைகளில் அவர்களுக்கு பணிகளை வழங்கி ஒருங்கிணைத்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், பணம் எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் ஒருங்கிணைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடி மூலம் பெறப்பட்ட பணம் மற்றும் சட்டவிரோத வருமானத்தில் குறைந்தது S$500,000 தொகையைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததில் அந்த நபர் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது.
மோசடி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கப் பொருட்களை மலேசியாவுக்கு எடுத்துச் சென்று, ஜொகூர் பாருவில் அவரிடம் ஒப்படைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றச் செயலின் மூலம் கிடைத்த பலன்களை மற்றொருவர் வைத்திருக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச் சதி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் அந்த நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது S$500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் மோசடி கும்பல்களுக்கு உதவுவதற்காக மலேசியாவிலிருந்து சிலர் வந்து, மோசடி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களைப் பெற்றுச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் தொலைபேசி மூலம் பணம், நகைகள் அல்லது பிற விலைமதிப்புள்ள பொருட்களை வேறு நபர்களிடம் ஒப்படைக்குமாறு ஒருபோதும் கேட்கமாட்டார்கள் என காவல்துறை நினைவூட்டியுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு ராயல் மலேசியக் காவல்துறையின் ஒத்துழைப்பு முக்கியமாக இருந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இரு நாடுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம் எல்லை தாண்டிய மோசடி கும்பல்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
