500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்!

500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்!

சிங்கப்பூரின் யிஷுன் பகுதியில் உள்ள ஈரச் சந்தையில், வாங்கிய பொருட்களின் எடை குறிப்பிடப்பட்ட அளவைவிட குறைவாக இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, சந்தையில் S$4க்கு 500 கிராம் கோழிக் இறைச்சி வாங்கியுள்ளார். வீட்டில் எடை பார்த்தபோது அது 486 கிராம் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 300 கிராம் மஞ்சள் நூடுல்ஸ் வாங்கிய நிலையில், வீட்டில் எடை பார்த்தபோது அது 281 கிராம் மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் அளவியல் அலுவலகம் தெரிவித்ததாவது, சந்தைகளில் பயன்படுத்தப்படும் எடை அளவீட்டு கருவிகள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யிஷுன் ரிங் ரோட்டில் உள்ள 104 மற்றும் 105ஆம் எண் கட்டிடங்களின் சந்தைப் பகுதிகளும் இந்தச் சோதனைகளில் அடங்கும்.

தற்போதைய புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சந்தையில் அதிகாரிகள் நேரடியாகச் சோதனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எடை அளவீட்டு கருவிகள், பயன்படுத்துவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர்களால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

துல்லியமான கருவிகளுக்கு “ACCURACY”என்ற அடையாளம் வழங்கப்படும். இந்தச் சான்று 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் கருவியை மீண்டும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரிகளின் சோதனை முடிவுகள் வெளியாகிய பின்னரே, எடை குறைவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும்.