ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?
சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 6:45 மணியளவில் ஆர்ச்சர்ட் லிங்க் நோக்கிச் செல்லும் கிரேஞ்ச் சாலை மற்றும் பெட்டர்சன் சாலை சந்திப்பில் நிகழ்ந்தது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட 79 வயது முதியவர் கடுமையான காயங்களுடன் சுயநினைவின்றி சாலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தின் முதற்கட்ட விசாரணையின் முடிவில், சாலையில் உரிய கவனமின்றியும் அலட்சியமாகவும் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 49 வய து கார் ஓட்டுநரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
சிங்கப்பூரில் அண்மைக்காலமாக முதிய பாதசாரிகள் விபத்தில் சிக்குவதும், சாலை மரணங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருந்தால் காவல்துறைக்கு தொடர்புக் கொண்டு தகவல் வழங்குமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.