“உங்கள் Device Lock செய்யப்பட்டது”..சிங்கப்பூரில் மீண்டும் ஒரு புதிய மோசடி..!!

“உங்கள் Device Lock செய்யப்பட்டது”..சிங்கப்பூரில் மீண்டும் ஒரு புதிய மோசடி..!!

சிங்கப்பூரில் Singapore Police Force (SPF) பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி போலி Pop-up எச்சரிக்கைகள் மூலம் பணம் பறிக்கும் Phishing மோசடி மீண்டும் பரவி வருவதாக காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இந்த மோசடியில், பொதுமக்களின் கணினி அல்லது பிற சாதனங்கள் சட்டவிரோதமான இணையதளங்களை மீண்டும் மீண்டும் பார்வையிட்டதாகக் கூறி, சாதனம் “Lock” செய்யப்பட்டுள்ளதாக போலியான எச்சரிக்கை காட்டப்படுகிறது.

மோசடி செய்பவர்கள் Singapore Police Force-ன் சின்னம் இடம்பெற்றது போன்ற போலி Pop-up ஒன்றை சாதனத்தில் தோன்றச் செய்கின்றனர்.

அதில், சட்டவிரோதமான இணையதளங்களைப் பார்வையிட்டதால் சாதனம் பூட்டப்பட்டுள்ளதாகவும், அதை மீண்டும் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை “அபராதமாக” செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் பணம் செலுத்தாவிட்டால் சாதனம் நிரந்தரமாக பூட்டப்படும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

இந்த போலி Pop-up-களில் Countdown Timer ஒன்றும் இடம்பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்த வேண்டும் என்ற அவசர உணர்வை உருவாக்கி, பொதுமக்களிடம் வங்கி அட்டை விவரங்களைப் பெறுவதே மோசடி செய்பவர்களின் நோக்கமாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் தங்களது வங்கி அட்டையில் அனுமதியற்ற வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதைப் பார்த்த பிறகே மோசடி செய்யப்பட்டதை உணரக்கூடும். சில நேரங்களில், அந்தத் தொகை போலியான அபராதத் தொகையைவிட அதிகமாக இருக்கலாம்.

Singapore Police Force பொதுமக்களின் கணினி, Laptop போன்ற தனிப்பட்ட சாதனங்களை தொலைவிலிருந்து Lock செய்யாது என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

அதேபோல், Pop-up எச்சரிக்கை மூலம் பொதுமக்களிடம் பணம் செலுத்துமாறும் காவல்துறை கேட்காது. எனவே, இதுபோன்ற எச்சரிக்கைகள் தோன்றினால் அவற்றை உண்மையான காவல்துறை அறிவிப்பாக கருத வேண்டாம்.

 

சந்தேகத்திற்குரிய Pop-up, Website அல்லது தகவல் கிடைத்தால், அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல் அதிகாரப்பூர்வ வழிகளில் தகவலைச் சரிபார்ப்பது முக்கியம்.

சந்தேகம் இருந்தால் 24 மணி நேர ScamShield Helpline 1799 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். ScamShield செயலியையும் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே வங்கி அட்டை விவரங்கள் பகிரப்பட்டிருந்தாலோ அல்லது அனுமதியற்ற பரிவர்த்தனை நடைபெற்றிருந்தாலோ, உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Singapore Police Force பெயரைப் பயன்படுத்தி மீண்டும் பரவி வரும் இந்த போலி Pop-up மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.